Health - What is siddtha medicine healing, Tamil Medicine Siddtha Medicines
What is siddtha medicine healing
1) சித்த மருத்துவம் என்றால் என்ன?சித்த மருத்துவம் என்பது தமிழ் மக்களுக்காகத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவம். வாழ்க்கை நெறிமுறைகளை அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்பதற்கான உரிய நெறிமுறைகளைத் தொகுத்தவர்கள் சித்தர்கள். எந்தவிதமான வசதியும் இல்லாத காலத்திலும் இந்த நோய்க்கு இந்த மருந்து எனவும் அது எவ்வளவு காலத்தில் தீரும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை அறிவியலும் உணர்ந்து ஏற்றுக் கொள்ள பல நூறு ஆண்டுகள் ஆயின. எடுத்துக்காட்டாகக் காமாலை நோய்க்குக் கீழாநெல்லியைச் சித்தர்கள் மருந்தாகக் கொடுத்தனர்.ஆனால் இப்போது தான் வெளிநாடுகளில் கீழாநெல்லியை மருந்தாக அறிவித்துள்ளனர். சித்தர்கள் கூறிய வழியில் மூலிகைகளை மட்டுமல்லாது பாடானங்கள், சீவ பொருட்கள் இவை அனைத்துமே நாங்கள் மருந்தாகப் பயன்படுத்துகிறோம்.அண்மையில் இலண்டன் பல்கலைகழகத்தில் பாடானம் என்று சொல்லக்கூடிய ஆர்சனிக்கை ஆய்வு செய்து, அது புற்று நோய்க்கு மிகச் சிறந்த மருந்து என அறிவித்துள்ளனர். ஆனால் ஆங்கில மருத்துவம் பாடானம் என்றால் நச்சுத் தன்மை வாய்ந்தது அதைப் பயன்படுத்தக்கூடாது என வலியுத்துகிறது.
2) மூலிகை சார்ந்த மருத்துவம் மட்டும்தான் சித்த மருத்துவமா?
வெறும் மூலிகை மட்டுமல்ல, அதற்குள் வாதம், வைத்தியம், ஞானம், யோகம் இவை உள்ளடங்கியுள்ளன. வாதம் என்பது தாழ்த்தப்பட்ட உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றுவது. அதாவது செம்பு, இரும்பு போன்ற தாழ்ந்த உலோகங்களைத் தங்கமாக மாற்றும் ஆற்றல் படைத்தவர்களாகச் சித்தர்கள் விளங்கியுள்ளனர். அப்படி மாற்றுகிறபோது தாயாரிக்கப்பட்ட முறைகளை மருந்தாக தந்தனர். அதுவே மருத்துவமானது. அதன்பின் யோகம். யோகம் என்பது பிராணயாமம், யோகாசனம் போன்ற அட்டமாசித்திகளையும், அட்டாங்க யோகங்களையும் அடக்கியது ஆகும். த்த நிலைதான் ஞான நிலை. அந்த ஞான நிலையை அடைவதற்காக இந்த உடம்பு தேவைப்படுகிறது. அந்த உடம்பு நீண்ட காலம் இருக்க வேண்டும். அதற்கு காயகல்பம் என்ற முறையில் சில வழிகளை வைத்துள்ளனர். அதனைப் பயன்படுத்துகிற பொழுது இந்த உடல் நீண்ட நாள் இருக்கும். அதாவது பிறவிப் பெருங்கடல் நீந்த இந்தக் கருவி வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களைச் சித்த மருத்துவம் தருகிறது. மயக்கம் தரும் மூலிகைகளின் துணை கொண்டு அறுவை மருத்துவங்களையும் சித்தர்கள் கையாண்டிருக்கிறார்கள். இப்போது நாம் அதை பின்பற்றுவதில்லை.
3) மருத்துவக் குறிப்புகளைச் சித்தர்கள் எந்த வடிவில் வழங்கியுள்ளார்கள்?
சித்தர்கள் சீடர்களுக்குக் கூறிய குறிப்புகள் வாய்மொழியாக வழங்கப்பட்டு பின்னர் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டன. அதுவே இப்போது பயன்படுகிறது. இது, தமிழில் மட்டுமே எழுதப்பட்டது. ஆயுர்வேதம் சமற்கிருத்தில் எழுதப்பட்டது. தமிழில் நல்ல புலமை உடையவர்கள் மட்டுமே மருத்துவத்தை உணரும் வண்ணம் மறைபொருளாகப் பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளதுதான் இதன் சிறப்பு. தமிழும் மருத்துவமும் நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இதில் ஈடுபடவேண்டும் என்பதற்காக இப்படி எழுதியுள்ளனர்.
4) குறிப்பாக என்ன மாதிரி நோய்களுக்குச் சித்த மருத்துவம் மிகச் சிறந்த பயனைத்தரும்?
தோல் நோய்க்குச் சித்த மருத்துவத்தை விட்டால் வேறு சிறந்த மருத்துவம் இல்லை. இந்த மருந்தைத் தொடர்ச்சியாக உண்பதால் எந்த பக்க விளைவும் இருக்காது. ஆனால் ஆங்கில மருத்துவத்தில் சிறாய்டு போன்ற மருந்துகளைத் தருவதால் பக்க விளைவுகள் வரும். அதேபோல் பக்க வாதம் போன்ற நோய்களுக்கு எங்களிடம் சிறப்பான மருந்துகள் உள்ளன. தொக்கனம், வர்மம் போன்ற முறைகளைப் பயன்படுத்துகிறோம். மக்களிடம் அதிகமாக இப்போழுது காணப்படும் மூட்டு வலிக்கு எங்களிடம் சிறப்பான மருந்து இருக்கிறது. அதே போல் நீரிழிவு நோய்க்கும் மருந்துகள் உள்ளன.
5) சித்த மருத்துவத்தில் உணவுக் கட்டுப்பாடு எப்படி? அசைவம் சேர்க்கலாமா?
உணவுக் கட்டுபாடு நோயர்களின் தன்மையைப் பொறுத்து இருக்கும். உடல் கூறுகளை மூன்று விதமாகப் பிரித்துள்ளனர். வாத உடல், பித்த உடல், கப உடல். உடல்களின் கூறுகளைப் பொறுத்து உணவைப் பிரித்துள்ளனர். சித்த மருத்துவத்தில் அசைவம் தவிர்க்கப்படுவதில்லை, நாங்கள் அசைவத்தையே மருந்தாகக் கொடுக்கிறோம். உடும்புக் கறியை லேகியமாக்கித வழங்குகிறோம். நத்தை, ஆமை, சங்கு இவற்றின் ஓட்டை பசுப்பமாக்கித் தருகிறோம். கருங்கோழியைச் சூரணமாக்கித் தருகிறோம். அதனுடைய முட்டையில் இருந்து தைலம் எடுக்கிறோம். அது நாக்கு வாதத்திற்கு மிக நல்ல மருந்து. மனித மண்டை ஒடு, நாய் மண்டை ஓட்டில் இருந்து மன நோய்களுக்கான மருந்து உருவாக்கின்றோம். அட்டைப் பூச்சிகளை வெளிப் புற மருத்துவத்திற்குப் பயன்படுத்துகிறோம். மக்களை சுற்றியுள்ள அனைத்தியுமே சித்தர்கள் மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர்
The topic on Health - What is siddtha medicine healing is posted by - Maha
Hope you have enjoyed, Health - What is siddtha medicine healingThanks for your time