Bluff - If i have next birth, அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால்?

If i have next birth


வாங்கிய பொருட்கள் யாவும் சரியாக வாங்கினேனா?.. என மீண்டும் சரிபார்த்துக் கொண்ட சிவா... பொருட்கள் எல்லாவற்றையும் காரில் ஏற்றி விட்டு காரை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான்.

நாளைய பொழுது.. ம்.. விடிந்தால் முதலாளியின் மகள் ராதாவின் நிச்சயதார்த்தம். அந்த வீடே குதூகலத்தில் மூழ்கிக் கிடந்தது.

முதலாளியின் இரண்டு ஆண் பிள்ளைகளும் தங்கை ராதாவின் நிச்சயதார்த்தத்துக்காக வெளியூரிலிருந்து வந்திருந்தார்கள்.

பெண் பிள்ளை இல்லையென்று பல வருடங்கள் தவமாய்த் தவமிருந்து அதன் பின் பிறந்தவளே ராதா.

ம் அந்த வீட்டு குலவிளக்கான.. அழகும், அறிவுமுடைய ராதாவின் நிச்சயதார்த்தம் என்றால் சும்மாவா என்ன?

ம் ஒரே கொண்டாட்டம்தான். அவர்கள் வீட்டில் மட்டுமா கொண்டாட்டம்? இல்லை இல்லை.

அந்த ஊருக்கே கொண்டாட்டம்தான்.

முதலாளி ராமுவின் பெயர் சொன்னாலே அந்த ஊரில் அவ்வளவு மரியாதை. எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாது உதவி செய்யும் குணமும், தாராள மனமும் படைத்தவர் ராதாவின் அப்பா ராமு. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கூட அளவிலா ஆனந்தத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.

சிவா... முதலாளி ராமுவின் வீட்டில் நான்கு வருடங்களாக கார் டிறைவராக வேலை செய்கிறான். தந்தையை இழந்த இவன் தாயின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தவன்.

நாளாந்தம் கூலி வேலை செய்து கிடைக்கும் அந்தப் பணத்தில்தான் அன்றாடம் தன் மகனின் வயிற்றையும், தன் வயிற்றையும் கழுவி வந்தாள் அவனின் தாய்.

வறுமை துரத்தி விரட்ட.. அவனின் தாய் நோய்வாய்ப்படவும்.. படிப்பில் திறமையிருந்தும் படிப்பைத் தொடர முடியாமல் வேலை தேடி அலைந்த போது முதலாளி ராமுவின் இரக்க குணத்தால் அவர் வீட்டில் கார் டிறைவர் ஆனான்.

வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்களில் அவனின் தாயும் இறந்து விட.. யாருமற்று தவித்த அவனுக்கு ஆறுதல் கூறி.. தன் பிள்ளை போல்.. சிவாவின் மேலும் அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்தவர்தான் முதலாளி ராமு.

சிவா... மனம் குழம்பிய நிலையில் வேகமாக காரை ஓட்டினான். அவன் மனம் அமைதியின்றி அழுது புலம்பிக் கொண்டிருந்தது.

"இன்று காலை ராதா கேட்ட வாக்கிற்கு முடிவு எடுத்தே ஆக வேண்டும். என்ன முடிவை எடுப்பது?" என்று தெரியாமல் அவனின் மனம் போராட்டத்தில் தவித்தது.

"சிவா.. நான் உங்கள மூண்டு வருசமா காதலிக்கிறன். உங்க பின்னால குட்டி போட்ட நாய் போலச் சுத்திச் சுத்தி வந்து.. நான் எத்தின தரம் என் வெக்கத்தை எல்லாம் விட்டு என் காதலைச் சொன்ன போதெல்லாம்.. நீங்க பதிலே சொல்லாம என்னை பேசிப் போட்டு போவீங்கள். இண்டைக்கு கடைசியா கேக்கிறன்... நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம். உங்களையே நினைச்சு.. உங்கள மட்டுமே என் நெஞ்சில சுமந்து... இதனை வருசமா என் நெஞ்சில வளர்த்த காதலை என்னால தூக்கி எறிந்து போட்டு... உங்கள மறந்து இன்னொருவருடன் எப்பிடி வாழ முடியும் சிவா?"..

"சிவா!.. என்னைக் காதலிக்கிறன் எண்டு ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா? எங்கட காதலை வீட்டில சொல்லி.. அவர்கள் ஏற்றுக் கொண்டால் வாழுவம். இல்லாட்டி சாவிலாவது ஒன்று சேருவம்".. இதற்காவது பதில் சொல்லுங்க சிவா..

என்று விம்மலுடன் தன் வேதனையைக் கொட்டித் தீர்த்தாள் ராதா.

"ராதா!.. உனக்கும் எனக்கும் என்ன பொருத்தம் இருக்கு? உன்ர அழகென்ன? உன்ர வசதி என்ன? இதற்கு எப்படி பெரியவங்கள் சம்மதம் சொல்வார்கள்? கொஞ்சமாவது யோசிச்சியா? ஆரம்பத்தில இருந்து அடிச்சடிச்சு எத்தனை தரம் சொல்லியும் நீ கேட்டியா?".. என்றான் சிவா.

"சிவா!.. உங்க மனசில நானில்லை... நீங்க என்னைக் காதலிக்கேல்லை.. எண்டு என்ர தலையில அடிச்சு சத்தியம் பண்ணுங்க பாப்பம் நீங்க இல்லை எண்டு சொல்லுங்கோ நான் உங்கள விட்டு விலகிறன்."

என்று ராதா கேட்க பதில் ஏதும் சொல்ல முடியாது மரத்துப் போய் நின்றான் சிவா.

"பின்னேரத்துக்குள்ள நீங்கள் நல்ல முடிவா எனக்கு சொல்ல வேணும். உங்கட முடிவுக்காக நான் காத்திப்ருப்பன்." என்று கூறிவிட்டு அழுதபடியே ஓடிச் சென்றாள் ராதா.

ஆம்! சிவாவிற்கும் ராதாமேல் காதல் இல்லாம லில்லை. இருந்த போதும் அவனின் நிலமைகள் யாவும், உள்ளத்தில் ஊற்றெடுத்திருந்த காதலை வெளிக்காட்ட விடாமல் தடுத்தன.

தினசரி ராதாவை பாடசாலை, ரியூசன் என ஏற்றிச் செல்லும் போதெல்லாம் ராதாவின் நடவடிக்கையில் காதலை உணர்ந்த போதும், எதுவுமே புரியாதது போல் நடித்துக் கொள்வான்.

சிவாவிற்கு அழகும், அறிவும் இருந்தாலும் ராதாவை காதலிக்கும் அளவிற்கு தனக்கு என்ன தகுதி இருக்கிறது? என தன்னைத் தானே கேட்டு மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வான்.

கார் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. சிவா தன் கடந்த காலத்தையெல்லாம் படிப்படியாக சிந்தித்தான்.

இறுதியில் அவன் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தான்.

"நான் வேலை தேடி அலைந்த போது எனக்கு வேலை தந்து என் அம்மா இறந்த பின் என்னை தன் பிள்ளை போல் பார்க்கும் முதலாளிக்கு நான் துரோகம் செய்யலாமா? அவரின் மானம், மரியாதை எல்லாவற்றையும் நான் குலைக்கலாமா? அவர் போட்ட சாப்பாட்டின் நன்றியை மறக்கலாமா? கூடாது.. கூடாது" என்ற முடிவுக்கு வந்தவனாய்

"ராதா!.. என்ன மன்னிச்சுக் கொள்ளம்மா. அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால்.. அந்த ஜென்மத் திலயாவது நாங்கள் ஒன்று சேர்வோம்."

என்று மனதிற்குள் தீர்க்கமான முடிவுக்கு வந்த சிவா, வீட்டிற்கு திரும்பும் சந்தி வந்ததை உணர்ந்தவனாய்.. சடாரென விரைவாக வந்த அந்த வேகத்துடனேயே காரை திருப்பிய போது..

எதிரே வேகமாய் வந்த லொறியைக் கூட கவனிக்காது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனும்.. மிக அருகாமையில் நெருங்கியதுமே அதைக் கவனித்தான்.

ஆனால்.. வந்த வேகத்தை கட்டுப்படுத்த முயலுமுன்னேரே அவனின் கார்.. அந்த லொறியுடன் பலமாக மோதியது.

"முதலாளி".. என்று கதறியபடி அவன் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்தது.

The topic on Bluff - If i have next birth is posted by - Malu

Hope you have enjoyed, Bluff - If i have next birthThanks for your time

Tech Bluff